பூந்தமல்லி: சென்னை பூந்தமல்லி அருகே உள்ள கண்ணப்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருப்பவர் மூர்த்தி. இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர், தனியார் மருத்துவமனையில் தனக்கு குழந்தை பிறந்ததாகவும், பிரசவம் முடிந்த பின் குழந்தையை மருத்துவமனை நிர்வாகத்தினர் வைத்துக் கொண்டு, தனக்கு குழந்தையே பிறக்கவில்லை என ஏமாற்றுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மூர்த்தி - உமா மகேஸ்வரி தம்பதியருக்கு திருமணம் முடிந்து ஓராண்டாகிறது. ஆனால் அவர் கர்ப்பம் ஆகாததால், கர்ப்பமானது போல் கணவர் குடும்பத்தினரை நம்ப வைத்து நாடகமாடியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், வளைகாப்பு நடத்தப்பட்டு, உமா மகேஸ்வரி தாய் வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில் வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தாயுடன் சென்ற உமா, தனக்கு பிரசவ வலி இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் தற்போது அனுமதிக்க முடியாது என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். சிறிது நேரத்தில், தனக்கு பெண் குழந்தை பிறந்ததாக கூறி, குழந்தை ஒன்றின் புகைப்படத்தை கணவரது செல்போனின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு உமா அனுப்பியுள்ளார்.
குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாகவும், பின்னர் குழந்தையை வைத்துக் கொண்டு, தனக்கு குழந்தையே பிறக்கவில்லை என மருத்துவமனை நிர்வாகம் ஏமாற்றுவதாகவும் கூறினார்.
தகவலறிந்து வந்த உமாவின் கணவர் குடும்பத்தினர், மருத்துவமனை நிர்வாகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த திருவேற்காடு போலீசார், விசாரணை நடத்தினர். உமா முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கர்ப்பமானதாக நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து உமாவின் கணவர் குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்து திரும்பிச் சென்றனர். உமாவையும், அவரது தாயாரையும் எச்சரித்து அனுப்பினர்.
இதையும் படிங்க: உங்க போனுக்கு இந்த மாதிரி மேசேஜ் வருதா? ஜாக்கிரதையா இருங்க மக்களே!