சென்னை: சென்னை விமான நிலைய சரக முனையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு, சரக்கு விமானங்களில் அனுப்ப வந்திருந்த பார்சல்களை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
இந்த ஆய்வின்போது, சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு ஒரு பார்சல் வந்திருந்தது. அந்தப் பார்சலில் சிவலிங்கம் சிலை ஒன்று இருப்பதாகவும், அந்த சிலை கும்பகோணத்தில் உள்ள கலை மற்றும் கைவினைப் பொருள்கள் விற்பனை மையத்தில் வாங்கியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பாா்சலை பிரித்து பாா்த்து சோதனையிட்டனர். பார்சலுக்குள் நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்கம் சிலை இருந்ததை கண்டுப்பிடித்தனர். மேலும், இந்த சிலை புதிதாக கும்பகோணத்தில் வாங்கியதற்கான சான்றிதழ் சமர்பிக்கப்படவில்லை.
தொல்லியல் துறை சான்றிதழ் இல்லை: மேலும், இதைப்போன்று சிலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறவா்கள், அந்த சிலை பழங்கால சிலை இல்லை என்று இந்திய தொல்லியல் துறையினா் அளித்த சான்றிதழையும் இணைக்க வேண்டும். ஆனால், அந்த சான்றிதழும் இணைக்கப்படவில்லை.
அதோடு சிலை பார்வைக்கு மிகவும் பழமையானதாக தெரிந்தது. இதையடுத்து இந்த சிலையை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு சுங்கத்துறையினர் தடை விதித்தனர். மேலும், சிலையை சுங்கத்துறையினர் அவா்களுடைய கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டனர்.
இந்திய தொல்லியல் துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, அவர்கள் வந்து சிலையை முழுமையாக ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிலை சுமார் 1800 ஆண்டுகளிலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது என்பதை கண்டுப்பிடித்தனர். இந்த சிலை 36 செ.மீ. உயரமும், 4.56 கிலோ எடையிலான பித்தளை சிலை என்பதையும் விலை மதிப்பில்லாதது என்பதையும் கண்டுப்பிடித்தனர்.
இதையடுத்து, சுங்கத்துறையினா் பழமையான சிலையை புதிய சிலை என்று கூறி, அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக கடத்த முயன்றதாக வழக்குப்பதிவு செய்தது மட்டுமில்லாமல், சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் இதுதொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
இது கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள கெடிலம் என்ற பகுதியில் இருந்து இந்த சிலை கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்கம் சிலை மிகவும் பழமையான தொல்லியல் துறையோடு சம்பந்தப்பட்டது என்பதால் இதை வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக அனுப்புவது தவறு என்றும் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், இந்த பழமையான விலைமதிப்பில்லாத சிலையை அனுப்பிய நபர்கள் யார்? எதற்காக வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர்? வெளிநாட்டில் இந்த சிலையை யார் வாங்குகின்றனா்? என்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிலைக்கு பின்னால் சா்வதேச சிலை கடத்தும் கும்பலின் சதித்திட்டம் அடங்கியுள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது.
இதையும் படிங்க: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஈரான் கப்பல்?