டெல்லி : பஞ்சாப் மாநிலத்தில் மூன்று முறை எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிமர்ஜித் சிங் பெயின்ஸ். இவர், லோக் ஜன்சாஃப் கட்சி சார்பில் தற்போதும் எம்எல்ஏ ஆக உள்ளார்.
இவர் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிமர்ஜித் சிங்-ஐ கைது செய்ய தீவிரம் காட்டிவந்தனர்.
இதையடுத்து போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, முன்பிணை கோரி சிமர்ஜித் சிங் லூதியானா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில அவரது முன்பிணை மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது.
தொடர்ந்து, “என் மீதான பாலியல் புகாரில் என்னை கைது செய்ய பஞ்சாப் அரசு தீவிரம் காட்டிவருகிறது. நான் தற்போது சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறேன். மேலும் என் மீது போலியாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. என் கைதுக்கு தடை விதிக்க வேண்டும்” என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி என்வி ரமணா மற்றும் நீதிபதிகள் ஏஎஸ் போபணா, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று (பிப்.1) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, வருகிற வியாழக்கிழமை (பிப்.3) வரை சிமர்ஜித் சிங் கைதுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க : Goa Elections 2022: ராகுல் காந்தியின் கோவா பயணம் திடீர் ரத்து!