சென்னை: சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக கடந்த அக்டோபர் மாதம் இலங்கை நாட்டைச் சேர்ந்த மேரி பிரான்சிஸ்கோ லட்சுமணன் என்பவர் விமான நிலைய குடியுரிமை அலுவலர்களால் கைது செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, அவருக்கு உடந்தையாக இருந்த இலங்கையைச் சேர்ந்த கென்னிஸ்டன் பெர்னாண்டோ, தர்மேந்திரன், ஜான்சன் சாமுவேல், சென்னையைச் சேர்ந்த மோகன் ஆகியோரை தமிழ்நாடு கியூ-பிரிவு காவலர்கள் கைது செய்தனர்.
சென்னையில் 4 ஆண்டுகள்...
கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணான பிரான்சிஸ்கோ, விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக நிதி திரட்டி பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் அனுப்பி வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கோ கடந்த 2018ஆம் ஆண்டு போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கையில் இருந்து சென்னை வந்ததும், அதன் பின்னர் அண்ணா நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அம்முகவரியைப் பயன்படுத்தி ஆதார் எண், ரேஷன் கார்டு, கேஸ் இணைப்பு, இந்திய பாஸ்போர்ட் ஆகியவற்றைப் பெற்றதும் விசாரணையில் அம்பலமானது.
எல்டிடிஇ-க்கு 42 கோடி ரூபாய்
தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன், கைது செய்யப்பட்ட பெண்ணுக்கும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு தொடர்பு இருந்த காரணத்தின் அடிப்படையில் இவ்வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களின் விசாரணையில் பிரான்சிஸ்கோ, அவர் வைத்திருந்த பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து போலி ஆவணங்களுடன் மும்பை செல்லவிருந்தது தெரியவந்தது.
குறிப்பாக, மும்பையில் உள்ள வங்கியொன்றில் இங்கிலாந்தைச் சேர்ந்த நபருக்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்து 42 கோடி ரூபாய் பணத்தை விடுதலை புலிகள் இயக்கத்தினருக்குச் சொந்தமான வங்கிக் கணக்கிற்கு மாற்ற இருந்ததும் என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது.
தொடரும் விசாரணை
அதுமட்டுமல்லாமல், மும்பையில் உள்ள தனியார் வங்கியின் வங்கிக் கணக்கு செயலிழந்து இருப்பதாக விடுதலை புலிகள் இயக்க ஆதரவாளர்கள் மூலம் பிரான்சிஸ்கோவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், அவர் ஆன்லைன் பரிவர்த்தனைக்கு வங்கி கணக்கில் மாற்றம் செய்வதற்காக வங்கிக் கணக்கின் உரிமையாளரான இங்கிலாந்தைச் சேர்ந்த நபரின் பெயரில் போலியாக சிம் கார்டு ஒன்றை வாங்கி மாற்றம் செய்ய முயன்றுள்ளார்.
அந்த முயற்சி தோல்வியுற்றதால் வங்கிக் கணக்கின் உரிமையாளருடைய வாரிசுபோல் போலி ஆவணங்களை தயார் செய்து நேரடியாகச் சென்று பணத்தை எடுக்க பிரான்சிஸ்கோ மும்பைக்குச் செல்ல இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனடிப்படையில், யார் பெயரில் மும்பையில் வங்கிக் கணக்கு உள்ளது என்பது குறித்தும், வேறு யார் யாரெல்லாம் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் பிரான்சிஸ்கோவிடம் என்ஐஏ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
எல்டிடிஇ தொடர்பில் எத்தனை பேர்?
இந்நிலையில், இலங்கைப் பெண்ணுக்கு உடந்தையாக செயல்பட்டதாக தமிழ்நாடு கியூ-பிரிவு காவலர்களால் கைது செய்யப்பட்ட கெனிஸ்டன் பெர்னாண்டோ, தர்மேந்திரன், மோகன், ஜான்சன் சாமுவேல் ஆகியோரை என்ஐஏ அலுவலர்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர்.
பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நான்கு பேரிடமும் என்ஐஏ அலுவலர்கள் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கம் தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலை புலிகள் இயக்கத்தின் தொடர்பில் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்தும், அந்த இயக்கத்திற்கு நிதி திரட்டி வேறு எந்தெந்த வழிகளில் பரிவர்த்தனை செய்யப்படுகிறது உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.