சென்னை: பத்மசேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலின் செயல்பாடுகள் குறித்து அப்பள்ளியில் தற்போது பயின்று வரும் மாணவி ஒருவர், தன்னுடைய சீனியரிடம் இன்ஸ்டாகிராமில் உரையாடி இருக்கிறார். அந்த உரையாடல் கீழ்வருமாறு:
பள்ளியில் தற்போது பயிலும் மாணவி: "பிஎஸ்பிபி பள்ளியில் நான் உங்களின் ஜூனியர், நானும் வணிகவியல் பிரிவில் தான் பயின்று வருகிறேன். வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால், என்னுடன் பயிலும் மாணவிகள், எனது ஜூனியர் மாணவிகள் ஆகியோரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகிறார்.
எனது தோழியிடம், 'சினிமாவிற்குச் செல்லலாமா' என்றும், மாணவர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் பாலியல் தொடர்பான இணையதள இணைப்புகளை அனுப்பியும் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதுகுறித்து பள்ளி தாளாளரிடம் நான் புகார் அளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உங்கள் நண்பர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை தெரிந்துகொள்ளத்தான் உங்களிடம் இதைக் கூறுகிறேன்".
முன்னாள் மாணவி: "கேட்பதற்கே கொடுமையாக உள்ளது. எனக்குத் தெரிந்து அவர் பற்றி எந்தத் தகவலும் இல்லை. உங்களுக்காக, என் நண்பர்களிடம் இதுகுறித்து கேட்டுப் பார்க்கிறேன்".
முன்னாள் மாணவி இன்ஸ்டாகிராமில் இந்த உரையாடலைப் பதிவிட்ட பின்னரே இதுகுறித்து அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் பதிவிடவே, குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இப்பிரச்னை குறித்து தானாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டது.
அதனால் தான், ஆசிரியர் ராஜகோபால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேலும், பள்ளி நிர்வாகத்தினரை விசாரணைக்கு வர குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
பொதுவெளிக்கு கொணர்தல்
பள்ளிகளில் குழந்தைகளுக்கும், மாணவிகளுக்கும் பல்வேறு ரீதியில் பாலியல் தொடர்பான அத்துமீறல்கள் நடைபெற்று வரும் சூழலில், இதுபோன்று அச்சமின்றி பாலியல் அத்துமீறல்களை பொதுவெளிக்கு கொண்டுவந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பத்மசேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரம்: 5 பேருக்கு சம்மன்