காஞ்சிபுரம்: பென்னலூர் பகுதியிலுள்ள சுங்கச்சாவடி அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதிய வேளையில் அவ்வழியே சென்றுகொண்டிருந்த வயதான பெண்மணியின் கழுத்திலிருந்து சுமார் 6 சவரன் தங்க நகையை இரண்டு வழிப்பறி கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
அப்போது அப்பெண்மணி கூச்சலிட்டதைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் வழிப்பறி கொள்ளையர்களைப் பிடிக்க விரட்டிச் சென்றுள்ளனர். தப்பி ஓட முயற்சித்த அவர்கள், தங்களது கைகளில் வைத்திருந்த துப்பாக்கிகளைக் கொண்டு பொதுமக்களைச் சுடுவதுபோல் காண்பித்து மிரட்டியுள்ளனர்.
மேலும், வழிப்பறி கொள்ளையர்களின் துப்பாக்கியைக் கண்டதும் பொதுமக்களும் அங்கிருந்து பயந்து சிதறி ஓடினர். அதன்பிறகு சுங்கச்சாவடி அருகில் இருங்காட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள ஏரியை ஒட்டியுள்ள காட்டுப்பகுதிக்குள் வழிப்பறி கொள்ளையர்கள் தப்பிச் சென்று பதுங்கியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா தலைமையில், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகருடன் வந்த காவலர்கள் காட்டுப்பகுதிக்குள் சென்று பதுங்கியிருக்கும் வழிப்பறி கொள்ளையர்களை வலைவீசித் தேடிவருகின்றனர்.
சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வழிப்பறி கொள்ளையர்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பதுங்கியிருக்கும் வழிப்பறி கொள்ளையர்கள் குறித்து எந்த ஒரு பின்புலமும் இதுவரை காவல் துறையினருக்குத் தெரியவில்லை.
துப்பாக்கி வைத்துள்ள வழிப்பறி கொள்ளையர்களை, தங்களது பாதுகாப்புகாக உயிருக்குச் சேதம் விளைவிக்காத வகையில் சுட்டுப்பிடிக்கவும் காவலர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்; 8 பேர் கொள்ளை கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!