கோயம்புத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள போளுவாம்பட்டி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளது.
தற்போது வலசை காலம் என்பதால் கேரள வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் இந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்நிலையில் போளுவாம்பட்டி வனச்சரகம் ஜவ் காடு வனப்பகுதியில் போளுவாம்பட்டி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது யானை உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.
இதனையடுத்து வனப் பணியாளர்கள், உயர் அலுவலர்களுக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உயிரிழந்தது சுமார் 30 வயதுடைய ஆண் யானை என்பதும், உயிரிழந்த ஆண் யானையின் இரண்டு தந்தங்களை வெட்டி எடுத்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறை மருத்துவர்கள் உயிரிழந்த யானையின் உடலை உடற்கூராய்வு செய்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜிடம் கேட்ட போது, இரண்டு தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டு யானை இறந்தது குறித்து மாவட்ட வன அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட வன அலுவலரும், உதவி வன பாதுகாவலர் ஆகியோர் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். யானை உயிரிழந்த பகுதி கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளதால், வேட்டை கும்பல் இந்த பகுதியில் ஊடுருவி யானையின் தந்தத்தை வேட்டையாடி அதனைக் கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.