சென்னை: ஏழு கிணறு பகுதியில் வசிக்கும் 12ஆம் வகுப்பு மாணவி சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கரோனா தொற்று தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில், வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொண்டித்தோப்பு சுந்தர முதலி தெருவில் வீடு வீடாக விழிப்புணர்வு செய்ய சென்ற மாணவியிடம், அத்தெருவைச் சேர்ந்த வாலாராம்(45) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி மாநகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக மாநகராட்சி அலுவலர்கள் அளித்த புகாரின்பேரில், பூக்கடை அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், வாலாராம் மாணவியிடம் தவறாக நடந்தது உண்மை என தெரியவந்தது.
மேலும் சம்பவம் தொடர்பாக வாலாராம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். ஊரடங்கு உள்ள நேரத்தில் கரோனா தொற்று விழிப்புணர்வு பணியில் ஈடுபட்ட மாணவிக்கு ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஏடிஎம் கொள்ளை: கொள்ளையனை திருடச் சொல்லி வீடியோ எடுத்த காவல்துறை!