திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ராஜம்மாள் என்ற பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது பிரச்னை தொடர்பாக மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு எழுதி கொடுக்கும் தங்கம் என்ற பெண்ணிடம் மனு எழுதி வாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் தங்கம், ராஜம்மாள் வைத்திருந்த கைப்பையை தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். பெண்களின் அலறல் சத்தம் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியிலிருந்த கன்ட்ரோல் ரூம் உதவி ஆய்வாளர்கள் பாஸ்கர், அன்னராசா ஆகியோர் ஓடி சென்று அந்த பிக் பாக்கெட் திருடனை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அந்த நபர் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் வளத கோயில் தெருவைச் சேர்ந்த பூலையா என்பது தெரியவந்த்து. இதையடுத்து அவரை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
தற்போது பூலையாவை கைது செய்த காவலர்கள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டுச் சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க...வீட்டிற்குள் 400 போன்சாய் மரங்கள் வளர்த்து அசத்தும் சுலைமான்