திருச்சி: தமிழநாட்டில் பல பகுதிகளில் சிலைகளைத் திருடி தொன்மையான சிலைகள் எனக்கூறி ஏமாற்றி சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் திருச்சி சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் பிரேமா சாந்தகுமாரி, சார்பு ஆய்வாளர்கள் ராஜேஷ், பாண்டியராஜன், தலைமைக்காவலர்கள் பரமசிவம் மற்றும் சிவபாலனாகர் அடங்கிய தனிப்படையினர் கோயம்புத்தூர் சென்று தகவலாளி மூலமாக சிலை வாங்குபவர்கள் போன்று பேசி, சிலையை கோயம்புத்தூருக்கு கொண்டு வருமாறு கூறினர்.
அதன்படி நேற்று (06.11.2022) அதிகாலை 5 மணி அளவில் கோவையிலிருந்து பல்லடம் செல்லும் மெயின் ரோட்டில் இருகூர் பிரிவில் காத்திருந்தபோது கேரள மாநிலப்பதிவு எண் கொண்ட சொகுசு காரில் வந்தவர்களை தனிப்படை போலீசார் நிறுத்தி விசாரித்தனர்.
இதில் காரை ஓட்டி வந்தவர் மேட்டூரைச்சேர்ந்த ஜெயந்த் (22) எனவும், காருக்குள் அமர்ந்திருந்த மற்றொரு நபர் கேரள மாநிலம், பாலக்காடைச்சேர்ந்த சிவபிரசாத் நம்பூதிரி (53) எனவும் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து காரை சோதனை செய்தபோது அந்த காரின் பின்னால் வெள்ளை நிற சாக்கு பையில், சுருட்டிய நிலையில் சுமார் 3 அடி உயரம் உள்ள திருவாச்சியுடன் கூடிய நடராஜர் உலோக சிலையை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அந்த சிலையைப் பற்றி அவர்களிடம் விசாரித்தபோது நடராஜர் சிலையைக்காரில் கொண்டு வந்ததற்கு தக்க முகாந்திரம் கூறாமல் சந்தேகிக்கும் படியாக முன்னுக்குப்பின் முரணாக கூறியதால், இருவரும் நடராஜர் உலக சிலையினை தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பழமையான கோயிலில் திருடி, மறைத்து வைத்திருந்து, சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கிடைத்து, விற்பனை செய்வதற்காக காரில் எடுத்து வந்துள்ளார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நடராஜர் உலோக சிலை மற்றும் இருவரையும் காவல் ஆய்வாளர்கள் கொடுத்தப்புகாரின்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் கைப்பற்றப்பட்ட சிலை மற்றும் இருவரையும் கும்பகோணம் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட நடராஜர் சிலை ரூ.10 கோடி மதிப்பு என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சிலை வாங்குவது போல நடித்து சிலைக்கடத்தல் கும்பலைப் பிடித்த போலீசார்!