சென்னை: ஓட்டேரியை சேர்ந்த தொழிலதிபர் மகளுடன் சேர்ந்து மூன்று இளம் பெண்கள் கீழ்ப்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயனிடம் புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரில், 'கடந்த 2019ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் கீழ்ப்பாக்கம் மில்லர் சாலையை சேர்ந்த முகமது சையத் (26) என்பவர் எனக்கு பழக்கமானார்.
கட்டாய வல்லுறவு: அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு செய்யும் ஸ்டைலான புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் நண்பர்களாக தொடங்கி பிறகு காதலித்தோம். அப்போது, 2020ஆம் ஆண்டு வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள உடற்பயிற்சி கூடம் அருகே அவரது காரிலேயே என்னை வலுக்கட்டாயமாக உடலுறவில் ஈடுபடுத்தினார்.
அதன் பிறகு, என்னை திருமணம் செய்வதாக கூறியதால், நாங்கள் அடிக்கடி தனிமையில் இருந்து வந்தோம். பிறகு, 2021 டிசம்பர் 21 அன்று முகமது சயாத் தனது காரில் நட்சத்திர ஓட்டலுக்கு என்னை அழைத்து சென்றார். அப்போது அந்த ஓட்டலில் இருந்த மூன்று பெண்கள், முகமது சையத்தை திருமணம் செய்ய போவதாக என்னிடம் கூறினர்.
![சென்னை மாடல் முகமது சையத்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-09-modelmohammedzaidbaildismissed-script-7204624_30032022202902_3003f_1648652342_523.jpeg)
மிரட்டிய மாடல்: முகமது சையத்தின் இன்ஸ்டாகிராம் ஐடியை எடுத்து, அதன்மூலம் அவனுடன் தொடர்பில் இருந்த பெண்களை தொடர்பு கொண்டபோதுதான் நான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, நான் சையத்திடம் கேட்டதற்கு என்னை கொலை செய்துவிடுவேன், எனது அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி வருகிறார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இப்புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய வேப்பேரி அனைத்து மகளிர் காவல் துறையினர், முகமது சையத்தை கைது செய்து அவர் மீது பாலியல் வன்முறை, மிரட்டல், பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி முகமது சையத் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி தங்க மாரியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகர அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, 'மனுதாரருக்கு ஜாமீன் தந்தால் சாட்சிகளை கலைத்துவிடுவார். அவர் கடுமையான குற்றம் செய்துள்ளார்' என்று வாதிட்டார். இதையடுத்து, முகமது சையத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பாரா மருத்துவ மாணவி தற்கொலை - கல்லூரியில் பணம் கட்ட முடியாததால் விபரீத முடிவா?