காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த தேவேந்திரன் (25) என்பவரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதுதொடர்பாக தேவேந்திரனின் தந்தை மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் மேல் தளத்தில், தேவேந்திரன் சடலமாக கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், தேவேந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொலையில் கிடைத்த துப்பு: இந்த நிலையில் கொலையாளிகள் மணிமங்கலத்தை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் மண்ணிவாக்கம் அருகே உள்ள பாழடைந்த கட்டடத்தில் பதுங்கி இருப்பதாகவும் போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், விக்னேஷ், சுரேந்தர், சதீஷ், சுதாகர், ரசுல் இஸ்லாமுல் அன்சாரி ஆகிய ஐந்து பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தேவேந்திரனின் நெருங்கிய நண்பர்கள் என்பதும், தேவேந்திரன் மற்றும் இவர்கள் 5 பேரும் கஞ்சா விற்பனை கும்பல் என்பதும் தெரியவந்தது.
"கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கஞ்சா விற்ற பணத்தைப் பங்கு பிரிப்பதில் தேவேந்திரனுக்கும், சுரேந்தருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விரோதம் காரணமாக தேவேந்திரன், சுரேந்தர், விக்னேஷ் ஆகிய இருவரையும் வெட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் மீண்டும் கஞ்சா விற்பனை செய்வதற்காக மணிமங்கலம் வந்துள்ளார். சுரேந்தர் கும்பல் தன்னை தீர்த்துக்கட்ட காத்திருக்கிறார்கள் என்பதை அறிந்த தேவேந்திரன், ஐவரின் வீடுகளுக்கும் சென்று, குடும்பத்தாரை மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேந்தர் உள்ளிட்ட ஐந்து பேரும் சேர்ந்து, தேவேந்திரனை கொலை செய்துள்ளனர்" என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து பட்டாக்கத்தி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். பின்னர் ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.