சென்னை: அம்பத்தூர் கள்ளிக்குப்பம், முத்தமிழ் நகர் ஏழாவது தெரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் முதல் தளத்தில் வசித்துவருபவர் பாலாஜி. இவர் கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரராக வேலை செய்துவருகிறார். இரண்டாவது தளத்தில் சந்திர சுதன் என்பவர் கடந்த ஓராண்டாக வசித்துவருகிறார்.
இந்நிலையில், பாலாஜி அவரது மனைவி வாசுதேவியுடன் நேற்று முன்தினம் (பிப்ரவரி 6) கேளம்பாக்கத்திற்குச் சென்றுள்ளார். பின்னர் இரவு வீட்டிற்கு வந்து மனைவி உடை எடுக்க பீரோவைத் திறந்தபோது அதில் வைத்திருந்த நகை பெட்டி திருடுபோயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக கணவரிடம் தெரிவிக்க பாலாஜி காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த அம்பத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேல் வீட்டில் உள்ள நபர் மீது சந்தேகம் உள்ளது என பாலாஜி தெரிவித்ததையடுத்து, சந்தேகத்தின்பேரில் இரண்டாவது தளத்தில் வசித்துவந்த சந்திர சுதனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் நகை திருடியது உறுதியானது.
அவரிடம் நடத்திய விசாரணையில், சந்திர சுதன் ஏசி மெக்கானிக்காக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கீழ்த் தளத்தில் உள்ள பாலாஜி பிப்ரவரி 3ஆம் தேதி பாரிமுனைக்கு வேலை நிமித்தமாகச் சென்றுள்ளார். அப்பொழுது மறதியாக வீட்டின் சாவியை கதவிலேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
இதனைச் சாதகமாக்கிக் கொண்ட சந்திர சுதன் கதவிலிருந்த சாவியை எடுத்துச் சென்று கோதுமையில் அச்சு உருவாக்கி தன்னிடம் இருந்த ஈயங்களை உருக்கி அச்சு அசலாக சாவியை தயாரித்து வைத்துக்கொண்டுள்ளார்.
பின்னர் அதனைக் கொண்டு நேற்று முன்தினம் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை திறந்து பீரோவினை லாவகமாகத் திறந்து பெட்டியில் வைத்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் வீட்டை பூட்டிவிட்டுச் சென்றது தெரியவந்தது. பின்னர் அவரை கைதுசெய்த காவல் துறையினர், நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதன் பின்னர் நகைகளைப் பெறவந்த பாலாஜி அவரது மனைவியிடம் காவல் உதவி ஆணையர், “இனியேனும் நகைகளை வங்கி லாக்கரில் வையுங்கள், அதற்கு சிறு பணம் மட்டுமே செலவாகும். அதனை வங்கியில் வையுங்கள் பாதுகாப்பாக இருக்கும்” என அறிவுரை வழங்கினார்.
பக்கத்து வீட்டின் சாவியை கோதுமையில் அச்சு தயாரித்து 52 சவரன் நகைகளை திருடிய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.