சென்னை: வண்ணாரப்பேட்டை, தாண்டவராயன் தெருவில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் கட்டட பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வண்ணாரப்பேட்டை பாலு செட்டி தெருவைச் சேர்ந்த மணி (30) என்பவர் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்காக மூன்று பேரை அப்பணிகளில் ஈடுபடச் செய்தார்.
அதன்படி, கொடுங்கையூர், சின்னான்டி மடத்தைச் சேர்ந்த சின்னதுரை (22), ஆகாஷ் (22), வீரப்பன் (55) ஆகியோர் 15 அடி ஆழத்திற்கும் 6 அடி அகலத்திற்கும் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தபோது திடீரென மண்சரிவு ஏற்பட்டது. அதில் சின்னதுரை, ஆகாஷ், வீரப்பன் ஆகியோர் சிக்கிக்கொண்டனர். இதில் வீரப்பன், ஆகாஷ் ஆகிய இருவரை மேலே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், அடியில் மாட்டிக்கொண்ட சின்னதுரை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை காவல் ஆய்வாளர் சங்கரநாராயணன் வழக்குப்பதிவு செய்து இது சம்பந்தமாக கட்டட உரிமையாளர், காண்ட்ராக்டர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.
மண் சரிந்து ஊழியர் பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம், தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.