ஈரோடு: ஆள் கடத்தல் சம்பவம் தொடர்பாக திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உள்பட நான்கு பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள எல்.எம்.பாலப்பாளையத்தைச் சேர்ந்த சாமுவேல்சுரேன் என்பவரைக் கடத்தி பணம் நகை பறிக்க முயல்வதாக அவரது மனைவி நர்மதா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்புகாரின் அடிப்படையில் சாமுவேல்சுரேன் என்பவரைக் கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டிய சென்னிமலை பிடாரியூர் திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்பிரமணியம் உள்பட 4 பேரை கவுந்தப்பாடி காவல் துறையினர் கைது செய்து சாமுவேலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்திய இரண்டு கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சாமுவேல்சுரேன், அவரது மனைவி நர்மதா, மகள் திவேனா கேத்ரின் ஆகியோருடன் எல்.எம்.பாலப்பாளைத்தில் வசித்து வந்தார். பங்குச்சந்தை முதலீட்டில் இழப்பைச் சந்தித்த இவர், பொது மக்களிடம் வங்கிய பணத்தைத் திருப்பி தரமுடியாத சூழல் ஏற்பட்டதால், குடும்பத்துடன் கோபி ஜே.ஜே. நகரில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 10ஆம் தேதி வெளியே சென்ற சாமுவேலசுரேன், வீடு திரும்பாததால் அவரது மனைவி நர்மதா, கவுந்தாப்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கவுந்தப்பாடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கடத்தப்பட்ட சாமுவேல்சுரேனின் கைப்பேசி எண்ணுக்கு வந்த அழைப்புகள் குறித்து விசாரத்து வந்தனர். இச்சூழலில் கடத்தல்காரர்கள் நடமாட்டத்தை அறிந்த கவுந்தப்பாடி காவல் துறையினர், காஞ்சிக்கோவில் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியே வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டபோது, மேற்படி காரில் இருந்து கடத்தப்பட்ட சாமுவேல் சுரேன் என்பவரை கீழே தள்ளிவிட்டு காருடன் திரும்பி செல்ல முற்பட்டவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். அதில் பிடாரியூர் திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்பிரமணியம் (36) உள்பட நான்கு பேர் மட்டுமே பிடிபட்டுள்ளனர். உடன் வந்த பவானியைச் சேர்ந்த சிவராஜா, ஸ்ரீதரன், விஜயமங்கலத்தைச் சேர்ந்த வெங்கடேசன், சென்னிமலையைச் சேர்ந்த வெங்கடேஷ் குமார் மற்றும் மோகன் (எ) சந்திரமோகன் ஆகியோர் தப்பியோடி விட்டனர்.
காவல் துறையினரால் மீட்கப்பட்ட சாமுவேல்சுரேன், தன்னைக் கடத்திய நபர்கள் காரில் அழைத்துச் சென்று, ஆசனூர் மற்றும் சென்னிமலையில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தியதாகக் கூறினார். மீட்கப்பட்ட சாமுவேல் சுரேன் என்பவருக்கு உடலில் ஆங்காங்கே சிறு சிறு காயங்கள் இருந்ததால் காவலர்கள் பாதுகாப்புடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். சாமுவேல் சுரேனை கடத்திச் சென்று அடைத்து வைத்து அடித்து துன்புறுத்திய 4 பேருடன், அவர்கள் வந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டுள்ளது.