சென்னை: ராயபுரம், காசிமேடு, காசிமேடு மீன்பிடி துறைமுகம் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க ராயபுரம் உதவி ஆணையர் உக்கிரபாண்டியன் உத்தரவின் பேரில் தனிப்படையினர் கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்கும் பணியல் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காசிமேடு மீன்பிடி துறைமுக அத்திப்பேடு பகுதியில் தனிப்படை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படி 2 பெண்கள் உள்பட 3 பேர் அமர்ந்திருந்தனர். உடனடியாக அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் காசிமேடு பகுதியைச் சேர்ந்த சத்யா(34), சுபா(34), முகமது அலி(19) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனையாளர்களாக இருந்து வந்ததும், திருவொற்றியூரைச் சேர்ந்த காயத்ரி (34) என்ற பெண்ணிடம் கஞ்சா வாங்குவதற்காக காசிமேட்டில் காத்திருந்ததும் தெரியவந்தது.
மேலும் காயத்ரியை பிடிக்க திட்டமிட்ட தனிப்படை காவல் துறையினர், ஏற்கனவே பிடிபட்டவர்களை வைத்து 2 கிலோ கஞ்சா வேணும் என காயத்ரியை தொடர்பு கொண்டுள்ளனர். காயத்ரியும் கஞ்சாவை எடுத்து கொண்டு திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் குளத்தின் அருகே வந்தபோது, அவரை சுற்றி வளைத்து தனிப்படை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர்.
மேலும், அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள காயத்ரி வீட்டிற்கு சென்று அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டதில், காயத்ரி ஆந்திர மாநிலம் தடா பகுதியில் இருந்து கஞ்சாவை ரயில் மூலமாக திருவொற்றியூர் கொண்டு வந்து, வடசென்னை பகுதி முழுவதும் சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், சத்யா மற்றும் முகமது அலி ஆகிய இருவர் மீது கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த வாரம் வண்ணாரப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனியார் வங்கி ஊழியரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி