மகாராஷ்டிரா: அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில்(ICU) ஏற்பட்ட தீ விபத்தில், 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் ஆவர்.
அகமத் நகரில் உள்ள மருத்துவமனையில் காலை 11 மணி அளவில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த வார்டில் மொத்தம் 17 பேர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மீதமுள்ள ஆறு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அலட்சியத்தால் பறிபோகும் உயிர்கள்
இதேபோல ஏப்ரல் 28 அன்று தானே மாவட்டம் மும்ப்ரா பகுதியில் அமைந்துள்ள கவுசா பிரைம் மருத்துவமனையில், அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 17 பேரில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலம் பருச் மாவட்டத்தில் அமைந்துள்ள நலன்புரி கோவிட் மருத்துவமனையில் மே 1 அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதில், 12 நோயாளிகள் உள்பட 16 பேர் பரிதாபமாக மரணமடைந்தனர்.
கரோனா தொற்று பரவல் உச்சத்திலிருந்த 2020ஆம் ஆண்டில், குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள அரசு கரோனா சிறப்பு அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில், எட்டு நோயாளிகள் உயிரிழந்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே மருத்துவமனை நிர்வாகங்களின் அலட்சியத்தினால், இதுபோன்ற பல அப்பாவி உயிர்கள் பறிபோனதாக கூறும் சமூக செயற்பாட்டாளர்கள், மருத்துவமனைகளை அரசு நிர்வாகங்கள் முறையான ஆய்வுகளுக்கு உள்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: குழந்தைகள் மருத்துவமனையில் தீ - ஒரு குழந்தை பலி!