ஃபரிதாபாத்: ஹரியானா மட்டுமின்றி நாடு முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகிதா தோமர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஃபரிதாபாத் விரைவு விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்தாண்டு (2020) அக்டோபர் மாதம் 26ஆம் தேதி நிகிதா தோமர் என்ற கல்லூரி மாணவி தேர்வெழுத கல்லூரிக்கு சென்றார். அவர் பல்லபார்க்கில் உள்ள கல்லூரியில் வணிகவியல் படித்து வந்தார். இந்தநிலையில் அவரை தவ்பிக் மற்றும் ரேஹன் ஆகியோர் காரில் கடத்தி செல்ல முயற்சித்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி நாடு முழுக்க பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளியை பல இடங்களில் தேடி, இறுதியில் ஒரு இடத்தில் மறைந்து இருக்கும்போது பிடித்தனர். இந்த வழக்கு ஃபரிதாபாத் விரைவு விசாரணை நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இதற்கிடையில் காவலர்கள் 700 பக்க குற்றபத்திரிகையை அக்டோபர் 27ஆம் தேதி தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் தவ்பிக், ரேஹன் தவிர அசாருதீன் என்பவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அவர் மீது குற்றவாளிகளுக்கு ஆயுதங்கள் வாங்கிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதியப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஃபரிதாபாத் விரைவு விசாரணை நீதிமன்றம் இன்று (மார்ச் 26) தீர்ப்பளித்தது. அதன்படி, முதன்மை குற்றவாளிகளான தவ்பிக் மற்றும் ரேஹன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும், போதுமான சாட்சியங்கள் இல்லையெனக் கூறி, அசாருதீன் மீதான வழக்கை தள்ளுபடி செய்து அவரை நீதிபதி விடுவித்தார். நிகிதா தோமர் வழக்கை ஃபரிதாபாத் விரைவு விசாரணை நீதிமன்றம் டிசம்பர் 1ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகள் முக்கிய சாட்சியமாக அளிக்கப்பட்டன. இது தவிர சில டிஜிட்டல் ஆவணங்களும் முன்வைக்கப்பட்டன.