கோயம்புத்தூர்: நபிகள் நாயகம் குறித்து இழிவாகப் பேசிய பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் ஜனவரி 31ஆம் தேதியன்று பாஜக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியிருந்தார். மேலும் அக்கூட்டத்தில் ஆயுதங்களுடன் சட்டவிரோதமாக முழக்கங்கள் எழுப்பி அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கல்யாணராமன் பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று கைது செய்யப்பட்டு, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பல்வேறு இஸ்லாமிய பொதுமக்கள் கல்யாணராமன், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
இச்சூழலில், காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்பேரில் இன்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கல்யாணராமன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தார்(cr.M.P.NO.01/G/2021/E1).
கல்யாணராமன் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதற்காக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, சென்னை குற்றப்பிரிவு நகர காவல் நிலையம், சென்னை மாநகர குற்றப்பிரிவு, திருவண்ணாமலை மாவட்ட நகர காவல் நிலையம், சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு, கோவை குனியமுத்தூர் காவல் நிலையம், மேட்டுப்பாளையம் காவல் நிலையம், கோவை ரத்தினபுரி காவல் நிலையம் என்று 10 இடங்களில் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.