சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்த நடிகையின் மின்னஞ்சல், டெலிகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதள கணக்குகளை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஹேக் செய்ய முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சி.பி.ஐ இயக்குநர் எனக் கூறி மின்னஞ்சல் ஒன்று நடிகைக்கு வந்துள்ளது. அதன் மூலம் நடிகையின் மின்னஞ்சல் கணக்கின் பெயர், கடவுசொல் ஆகியவற்றைப் பெற முயற்சித்து ஹேக் செய்ய திட்டமிடுவதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொடர்பான ஆதாரங்கள் நடிகையின் டெலிகிராம், மின்னஞ்சலில் இணைக்கப்பட்ட மேகக் கணினி சேமிப்புப் பெட்டகத்தில் (CLOUD STORAGE) உள்ளதால் அதை அழிக்க சைபர் ஹேக்கர்கள் மூலம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக நடிகை அடையாறு சைபர் கிரைம் காவல் துறையினரை அணுகியபோது, அந்த மின்னஞ்சல் கணக்கு போலியானது என தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்பிணை கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜூன் 9 ஆம் தேதி வரை அவரை கைது செய்ய கூடாது எனக் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
மலேசிய நாட்டை சேர்ந்த தமிழ் திரைப்பட நடிகை, மே 28ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை கடந்த 5 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி குடும்பம் நடத்தி, கோபாலபுரம் தனியார் மருத்துவமனையில் மூன்று முறை கட்டாயக் கருக்கலைப்பு செய்துள்ளதாக பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.