சென்னை: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் கரிகாலன் நகர், செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (70) பெயின்டர் வேலை செய்து வந்துள்ளார்.
செப்டம்பர் 10 அன்று விநாயகர் சதுர்த்தி என்பதால், ராஜேந்திரன் வீட்டின் அருகே உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்றுவிட்டு இரவு 8 மணியளவில் வீடு திரும்பினார்.
அப்போது ராஜேந்திரனுக்கு அவசரமாக சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்படவே, அவரின் வீட்டின் அருகே சிறுநீர் கழித்துள்ளார். அந்த நேரத்தில் ராஜேந்திரன் வீட்டின் அருகே வசித்து சென்ட்ரிங் வேலை செய்து வரும் சீனிவாசன் (55) என்பவர் வீட்டின் வெளியே வந்தபோது, தன் வீட்டின் எதிரே சிறுநீர் கழித்த ராஜேந்திரனைப் பார்த்து, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். பதிலுக்கு ராஜேந்திரனும் திட்டியுள்ளார்.
கண்ணை மறைத்த சினத்தால் நடந்த விபரீதம்
இதனால் கோபமடைந்த சீனிவாசன் அங்கிருந்த உருட்டுக் கட்டையை எடுத்து, ராஜேந்திரனின் தலையில் சரமாரியாகத் தாக்கியதில், ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் அலறல் சத்தத்துடன் கீழே சாய்ந்துள்ளார்.
உடனே சீனிவாசன் அங்கிருந்து தப்பி ஓடினார். இதைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜேந்திரனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், தீவிர சிகிச்சைக்காக அங்கிருந்து சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏழு நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த, ராஜேந்திரன் சிகிச்சைப் பலனின்றி செப்டம்பர் 17ஆம் தேதி அன்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த சங்கர் நகர் காவல் துறையினர் தலைமறைவாக இருந்த சீனிவாசனை கைதுசெய்து, அவர் மீது கொலை வழக்கு பதிவுசெய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட வாய்த்தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிசிடிவி இருந்தா என்ன - அலேக்காக பைக்கை திருடும் பலே கொள்ளையர்