கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் கடந்த 27ஆம் தேதி காந்தி பார்க் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் இருளப்பன் நிறுத்தி சோதனை செய்துள்ளார். அதில், ஸ்ரீதர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக இருசக்கர வாகனத்தை உதவி ஆய்வாளர் இருளப்பன் பறிமுதல்செய்துள்ளார்.
அப்போது, தான் மது அருந்தவில்லை என ஸ்ரீதர் கூறியபோதும் வாகனத்தைத் தர வேண்டுமென்றால் மூன்றாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் அல்லது காவல் நிலையத்தில் வந்து வாகனத்தைப் பெறவேண்டுமென்றால் ஆறாயிரம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டியுள்ளார். மேலும் ஸ்ரீதர் வெரைட்டி ஹால் காவல் நிலையத்துக்கு வந்து சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசனிடம் வாகனத்தை பற்றி கேட்டுள்ளார்.
அப்போது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்குச் சென்றால் 14 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும் என்பதால் இரண்டாயிரம் ரூபாய் கையூட்டு கொடுத்தால் வாகனத்தைத் தருவதாகக் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீதர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் இது குறித்து புகார் செய்தார்.
இதையடுத்து காவல் நிலையத்தில் வைத்து ஸ்ரீதர் ரசாயனம் தடவிய இரண்டாயிரம் ரூபாய் பணத்தை உதவி ஆய்வாளர் இருளப்பன், மற்றொரு உதவி ஆய்வாளர் கணேசன் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அப்போது இரண்டு காவலர்களையும் அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கையும் களவுமாகப் பிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறி பறிமுதல்செய்த இருசக்கர வாகனத்தை தனியார் பார்க்கிங்கில் மறைத்துவைத்து லஞ்சம் பெற இருவரும் முயன்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைதுசெய்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர்.
இதையும் படிங்க...உத்தரகாண்டில் அரசியல் திருப்பம்: முதலமைச்சர் திடீர் ராஜினாமா