சென்னை: வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் பெண் புகாரளித்துள்ளார்.
சென்னை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் ரீனல்(36). இவர் அமைந்தகரை தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவருக்கும் அண்ணா நகரைச் சேர்ந்த லிடியா(30) என்பவருக்கும் 2017ஆம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது.
டேவிட் ரீனல் குடும்பத்தினர் திருமணத்திற்கு 100 சவரன் தங்க நகை பெண்ணுக்கும், 50 சவரன் நகை மாப்பிளைக்கும், பத்து லட்சம் ரூபாய் பணமும், காரும் தரவேண்டும் என பெண் வீட்டாரிடம் கேட்டுள்ளனர். ஆனால் லிடியா வீட்டில் 87 சவரன் நகை, 6 லட்சம் பணமும், கார் வாங்குவதற்கு 3 லட்சம் பணமும் கொடுத்துள்ளனர்.
இதனால் திருமணம் முடிந்த நாளிலிருந்தே கேட்டதில் கிடைக்காத மீதம் நகையும், பணமும் எப்போது தருவீர்கள் என டேவிட் ரீனலும், அவரது குடும்பத்தினரும் லிடியாவிடம் அடிக்கடி பிரச்னை செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், லிடியா உடம்பில் சூடு வைத்தும் டேவிட் வரதட்சணை கொடுமை செய்துள்ளார்.
இதனாலேயெ இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, திருமணம் முடிந்து ஐந்து மாதங்களிலேயே கணவரைப் பிரிந்து லிடியா மூன்று வருடங்களாக தாய் வீட்டில் வாழ்ந்துவருகிறார். இச்சூழலில் திருமணத்திற்கு போட்ட 87 சவரன் நகை,13 லட்சம் ரூபாய் ரொக்கம், திருமணத்திற்கு கொடுத்த பொருட்கள் ஆகியவற்றை திருப்பி தரும்படி லிடியா வீட்டார் கேட்டுள்ளனர்.
ஆனால் டேவிட் ரீனல் குடும்பத்தினர் நகையையும், பணத்தையும் திருப்பி தருகிறோம் என மூன்று வருடங்களாக அலைக்கழித்து வந்துள்ளனர். இதனால் லிடியா கீழ்ப்பாக்கம் காவல் உதவி ஆணையரிடம் பணம், நகைகளை மீட்டு தரும்படியும், தன்னை வரதட்சனை கொடுமை செய்து துன்புறுத்திய டேவிட் ரீனல் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் காவல் உதவி ஆணையர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.