செங்கல்பட்டு: சிங்கப்பெருமாள் கோவில் அருகே பூஜா கோயல் என்பவருக்குச் சொந்தமாக ஒன்றே முக்கால் ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு, தேஜஸ் மொபார்ட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகை அடிப்படையில் ஒப்பந்தம் போட்டு அளித்திருந்தார் என்று கூறப்படுகிறது. பத்தாண்டுகளுக்கு, அதாவது 2028 ஆம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தம் உள்ளதாக தெரிகிறது.
ஆனால் தற்போதே அந்த இடத்தை காலி செய்து தர வேண்டும் என்று பூஜா கோயல் தனியார் நிறுவனத்தை வலியுறுத்தி உள்ளார். குத்தகை காலம் முடிவடையாததால் இடத்தை காலி செய்ய நிறுவன தரப்பு மறுத்துள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் இது சம்பந்தமாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே நிலத்தின் உரிமையாளரான பூஜா கோயல், நிறுவனத்தை காலி செய்து இடத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு, தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவை அணுகியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நிறுவனத்திற்கு நேற்று காலை சென்ற எஸ்.ஆர்.ராஜா, நிறுவன உரிமையாளரிடம் இடத்தை காலி செய்வது குறித்து பேசி உள்ளார்.
பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஆரம்பித்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், எஸ்.ஆர்.ராஜா நிறுவன உரிமையாளரை ஆபாசமாகப் பேசி, கை கால்களை உடைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தேஜஸ் மொபார்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாம்பரம் மாநகர் மறைமலை காவல்நிலையத்தில் எஸ்.ஆர்.ராஜா மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒழுங்கீனமும் முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் - முதலமைச்சர்