சென்னை: தமிழ்நாடு சைபர் கிரைம் காவல் துறையினர் லோரன்ஸ் ரான்சம்வேர் (Lorenz Ransomware) எனும் புதிய வைரஸ் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இந்த வைரஸ் கோப்புகளை (files) முடக்கி, அதனை மீட்டெடுக்க பணம் கோரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பெரு நிறுவனங்களின் வணிகக் கோப்புகளை முடக்குவதால் வேறு வழியின்றி பணம் செலுத்தி கோப்புகளை மீட்டெடுக்க நேருகிறது.
இந்த வைரஸ் எந்தவொரு கணினியையும் பாதிக்கும் என்பதால் தேவையற்ற வலைதளங்களை பார்வையிடுவது, லிங்குகளை கிளிக் செய்வது, வலைதளப் பயன்பாட்டில் இருக்கும்போது தேவையற்ற விளம்பரங்களை பார்வையிடுதல் போன்றவற்றை செய்வதால் இந்த வைரஸ் கணினியை தாக்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் பெரு நிறுவனங்களிடம் இதுபோல் லட்சக்கணக்கில் டாலர்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபிஷ்ஷிங் இ-மெயில்கள் (phishing e-mail) மற்றும் ஸ்பாம் இ-மெயில்கள் (spam e-mail) உள்ளிட்டவை மூலமாக கணினிகளுக்கு பரப்பப்பட்டு, வலை பின்னல் முறையில் இணைக்கப்பட்டுள்ள மற்ற கணினிகளுக்கும் இந்த வைரஸ் பரவுகிறது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளின் எல்லா தரவுகளும் முடக்கப்பட்டு, அதனை மீட்டெடுக்க பிரத்தியேக கட்டணத்தளத்தை அமைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எனவே தேவையற்ற இணைப்புகளில் நுழையவோ, கிளிக் செய்யவோ வேண்டாம் என சைபர் கிரைம் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நெட்வொர்க்குகளில் இருந்து அறியப்படாத கணக்குகளை நீக்குதல், தனிப்பட்ட வணிகத் தரவின் கோப்புகளை பிரதி எடுத்து வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது குறிப்பிட்ட நபர்கள் அல்லது தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கு எதிரானது அல்ல என்றும் சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்
இதையும் படிங்க: ராமேஸ்வரம் அருகே சாக்கு மூட்டையில் கிடந்த கஞ்சா பொட்டலங்கள்