கல்வராயன்மலைப் பகுதியில் உரிமம் பெறாத துப்பாக்கிகளை வைத்து வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஉல்ஹக் உத்தரவின் பேரில், நேற்று அதிகாலை (மே.30) டிஎஸ்பி விஜயராஜூலு மற்றும் காவல் ஆய்வாளர்கள் காமராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கல்வராயன் மலைப் பகுதியில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் தாழ்மதூர் கிராமத்தில் 4 நாட்டு துப்பாக்கிகளும், தாழ்கெண்டிக்கல் கிராமத்தில் 2 நாட்டு துப்பாக்கிகளும் முறையே மொத்தம் 6 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தாழ்மதூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன், மாயவன், தர்மன் மற்றும் தாழ்கெண்டுக்கல் கிராமத்தைச் சேர்ந்த முனியன், ஆண்டி ஆகியோரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளை வைத்துள்ளவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஉல்ஹக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.