சென்னை: ஓஎம்ஆர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் 11ஆம் தேதி படுகாயமடைந்த ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு, உரிய தகவலைச் சொல்லாமல் சென்றுவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில், காவல் துறையினர் மருத்துவமனைக்குச் சென்று அனுமதிக்கப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
ஆசான வாயிலில் வைத்து கடத்தல்
காயமடைந்த நபர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் (எ) செல்லப்பா(28) என்பதும், துபாயில் பணிபுரிந்து வந்த செல்வம் விமானம் மூலமாக சென்னைக்கு வரும்போது, அருண் பிரசாத் என்பவர் செல்வத்திடம் அணுகி, ஒரு கிலோ தங்கக் கட்டியை குருவியாகச் சென்று, அகமதாபாத்தில் குறிப்பிட்ட நபரிடம் கொடுத்தால் 1 லட்சம் ரூபாய் தருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கு செல்வம் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, 1 கிலோ தங்கக் கட்டியை அவரது ஆசன வாயிலில் மறைத்து வைத்து அனுப்பி வைத்துள்ளனர். தங்கக்கட்டியை கொண்டு வரும் வழியில் செல்வத்திற்கு திடீரென வலி ஏற்பட்டதால் தன்னுடன் விமானத்தில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த நண்பர் அனீஸ் குமார் என்பவரிடம் தங்கத்தை கொடுத்து அகமதாபாத்தில் குறிப்பிட்ட நபரிடம் கொடுத்துவிடும்படி கூறியதுடன் 80 ஆயிரம் பணம் தருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு மாதம் தொடர் சித்ரவதை
விமானம் அகமதாபாத் நிலையத்திற்கு வந்தடைந்த உடன் அனீஸ்குமார் 1 கிலோ தங்கத்துடன் மாயமானதாக செல்வம் காவல் துறையிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர், தங்கத்திற்காக காத்திருந்த கடத்தல் கும்பல், தன்னை கடத்திச் சென்று ஆசனவாயிலில் மறைத்து வைத்திருந்த தங்கத்தை தேடியதுடன், தன்னைத் தாக்கி தங்கம் எங்கே என கேட்டு அவரை துன்புறுத்தியுள்ளனர். பின்னர் கடத்தல் கும்பல் 45 நாட்கள் தன்னை சென்னையில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அறையில் வைத்து சித்ரவதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, வடக்கு கடற்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, செல்வத்தை வைத்து தாக்கிய மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் அமைந்துள்ள தனியார் விடுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அங்கு அவர்கள் தங்கியதற்கான ஆதாரம், சிசிடிவி காட்சிகள் ஆகியவை இல்லாததால் காவலர்கள் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டது.
தொடர்ந்து, அருகிலிருந்த கடைக்குச் சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பிராட்வே பகுதியைச் சேர்ந்த முகமது இம்தியாஸ் (27) என்பவர், அவர்கள் தங்குவதற்கு அறை எடுத்து கொடுத்தது தெரியவந்தது.
7 பேருக்கு வலை வீச்சு
உடனடியாக, காவலர்கள் இம்தியாஸை கைது செய்து விசாரணை நடத்தியதில், '1 கிலோ தங்கத்தை கொண்டுவந்த செல்வத்தை ஹக்கீம், நூர், அருண் பிரசாத், ஹுசைன், அமின், ஜெயின், பைரவ் உட்பட 7 பேர் விசாரிக்க வேண்டும் என என்னிடம் கூறினர். அதனால், எனது உறவினரின் லாட்ஜில் இரு முறை அறை எடுத்து கொடுத்தேன். பின்னர், சிசிடிவி மற்றும் பதிவு ஆதாரங்களை அழித்துவிட்டேன்' என இம்தியாஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், இந்தக் கும்பல் பல நாட்டிலிருந்து விமானம் மூலமாக தங்கத்தைக் கடத்தி வருவதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இம்தியாஸை காவல் துறையினர் கைது செய்து தலைமறைவாக உள்ள 7 நபர்களைத் தேடி வருகின்றனர். இந்தக் கும்பலை கைது செய்த பிறகே தங்க கடத்தல் நெட்வொர்க் குறித்து தெரியவரும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆய்வாளரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது