சென்னை: வியாசர்பாடி பி.வி காலனி பகுதியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி(54). இவர் திருவொற்றியூரில் உள்ள ரேஷன் கடையில் எடை மதிப்பீட்டாளர் பணி செய்து வருகிறார். இவர் கடந்த 26 ஆம் தேதி காலை 7 மணிக்கு பணம் எடுப்பதற்காக அம்பேத்கர் கல்லூரி எதிரே உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்றார். அப்போது ஏடி.எம்மிலிருந்து பணம் வராததால், பின்னால் இருந்த நபர் தான் பணத்தை எடுத்து தருவதாக கூறி அவரது ஏடிஎம் கார்டை வாங்கி பாஸ்வேர்ட் நம்பரையும் வாங்கி பணம் எடுத்து தருவதாக முதியவரிடம் கூறியுள்ளார்.
பின்னர் முதியவரின் வங்கி கணக்கில் இருந்த தொகையை ஆய்வு செய்துவிட்டு, சிறிது நேரத்தில் பணம் வரவில்லை என்று கூறி அவரது ஏடிஎம் கார்டுக்கு பதிலாக வேறு ஒரு கார்டை கொடுத்து விட்டு சென்று விட்டார். இதனை நம்பிய புண்ணியமூர்த்தி பணம் வரவில்லை என்று நினைத்து வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் அன்று மாலை புண்ணியமூர்த்தி வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரது வங்கி கணக்கில் இருந்து 1.15 லட்சம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த புண்ணியமூர்த்தி, இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார், ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் முதியவருக்கு உதவி செய்வது போன்று தெரியவந்தது. இதனையடுத்து புண்ணியமூர்த்திக்கு வந்த குறுந்தகவலை பார்த்தபோது 40 ஆயிரம் ரூபாய் ஏடிஎம்மில் எடுத்து இருப்பதும், மீதி பணத்திற்கு பிரபல நகைக்கடையில் நகை வாங்கியது போன்றும் குறுந்தகவல் இருந்தன.
இதனை வைத்து நகை கடைக்கு சென்று விசாரித்த போது வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் நகை வாங்கியது சிசிடிவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து செல்போன் டவர் லொகேஷனை வைத்து விசாரணை நடத்திய போலீசார் மீஞ்சூரில் பதுங்கி இருந்த வட மாநிலத்தவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பகாளி குமார்29), மனோஜ் குமார் ஷானி(28), அஜய் குமார் (26) என்பதும் தெரியவந்தது. இவர்கள் சென்னையில் பல பகுதிகளில் பிரிந்து ஏ.டி.எம். மையத்திற்கு வரும் முதியவர்களை மட்டுமே குறிவைத்து, பணம் எடுத்து தருவதாக கூறி வேறு ஏ.டி.எம் கார்டை வழங்கி வருவது தெரியவந்தது.
பின்னர் ஏமாற்றி வாங்கிய ஏ.டி.எம் கார்டை வைத்து நகைக்கடை மற்றும் ஏ.டி.எம் மையம் மூலம் பணத்தை கொள்ளையடித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 1.5 சவரன் செயின் மற்றும் 10,000 ரூபாய் பணம், 50 ஏ.டி.எம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ. 92 லட்சம் மோசடி செய்த பலே தம்பதி