திருநெல்வேலி: சேரன்மகாதேவி அருகேயுள்ள வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் பிப்ரவரி 6ஆம் தேதியன்று வீரவநல்லூர் சுப்பிரமணியபுரம் தெருவைச் சேர்ந்த வேம்பு (67) என்ற பெண்மணி காலையில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் பறித்துச் சென்றார். அதேபோல் 02.03.2021 அன்று வெள்ளாங்குளி பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள்(24) என்பவர் காலையில் கோலம் போட்டுக் கொண்டிருக்கும் போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.
இது குறித்து இருவரும் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் ராஜ் தலைமையிலான காவலர்கள், தீவிர விசாரணை மேற்கொண்டு, சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வெள்ளாங்குளி பகுதியைச் சேர்ந்த முத்துகணேஷ்(24) என்பவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து 11.5 பவுன் தங்க நகைககளை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணையில் ஈடுபடும் போது, ஒரே நபர் தான் இரண்டு இடங்களிலும் கைவரிசை காட்டியுள்ளார் என தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: தாம்பரம் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனை - 3 லட்சம் பறிமுதல்