புதுச்சேரி: கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வெளிநாட்டு பெண்கள் உள்பட 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை
புதுச்சேரியில் கஞ்சா நடமாட்டத்தை தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து வாழைக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சிறப்பு அதிரடிப்படை காவல் துறை ஆய்வாளர் இனியன் தலைமையில், காவல் துறையினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த வீடு ஒன்றில் வெளிநாட்டைச் சேர்ந்த 3 பெண்கள், 3 ஆண்கள் இருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில், நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த 2009ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து, சட்ட விரோதமாக விசா இன்றி புதுவையில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
3 கிலோ கஞ்சா பதுக்கல்:
இதைத்தொடர்ந்து அந்த வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தியதில் 3 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாகத் தெரிவித்தனர்.
வாழைக்குளம் பகுதியை சேர்ந்த விவேக் என்பவர் உதவியாக இருப்பதாக தெரியவந்த நிலையில், அவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 7 நபர்கள் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: முன்விரோதத்தால் இருவரை காவலர் லத்தியால் தாக்கும் வீடியோ