சென்னை: விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்ற சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த மோகன் என்பவரது மகன் கௌதம்(11), போரூர் அடுத்த நூம்பல் பகுதியிலுள்ள அவரது மாமா ரவி என்பவரது வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.
இன்று மாலை உறவினர் மகனுடன் கௌதம் நூம்பலில் உள்ள குளத்தில் விநாயகர் சிலையைக் கரைத்து விட்டு, அதே குளத்தில் இருவரும் சேர்ந்து குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பராதவிதமாக குளத்தில் கவுதம் மூழ்கினார்.
உடனிருந்தவர் கௌதமை மீட்க முயற்சி செய்து, அது முடியாமல் போனது. உடனடியாக சம்பவம் குறித்துத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து நீரில் மூழ்கிக் கிடந்த கௌதமை சடலமாக மீட்டனர்.
இதையடுத்து மதுரவாயல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உறவினரின் வீட்டிற்கு வந்த சிறுவன் விநாயகர் சிலையைக் கரைத்து விட்டு குளத்தில் குளிக்கும்போது நீரில் மூழ்கி இறந்துபோன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.