சென்னை: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (நவ. 19) இரவு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அப்போது டுலல் சன்ட்ரா (38) என்ற பெயரில் இந்திய பாஸ்போர்ட்டில் ஒரு ஆண் பயணி வந்தார். குடியுரிமை அதிகாரிகளுக்கு அந்த பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை நிறுத்தி விசாரித்தனர். அதோடு அவருடைய பாஸ்போர்ட்டை கம்ப்யூட்டரில் பரிசோதித்தபோது, அது போலியான பாஸ்போர்ட் என்று தெரிய வந்தது.
உடனடியாக அந்த பயணியை வெளியே விடாமல், குடியுரிமை அலுவலக அறையில் அடைத்து வைத்தனா். மேலும் குடியுரிமை அதிகாரிகள், ஒன்றிய உளவு பிரிவு அதிகாரிகள், கியூ பிரிவு போலீசாா், அந்த பயணியிடம் தீவிரமாக விசாரணை நடத்தினா். அப்போது அந்த பயணி, வங்க தேசத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.
மேலும் சா்வதேச போலி பாஸ்போா்ட் கும்பலிடம் பணம் கொடுத்து இந்திய போலி பாஸ்போர்ட்டை வாங்கியதும் தெரியவந்தது. இந்த போலி பாஸ்போா்ட்டை பயன்படுத்தி, கோலாலம்பூரிலிருந்து சென்னை வந்துள்ளாா். இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் பயணியை கைது செய்தனா்.
மேலும் இவர் இந்திய பாஸ்போர்ட்டை எந்த நாட்டில் வாங்கினாா். எதற்காக வாங்கினாா்? சென்னையில் எங்கு தங்குவதற்காக வந்தாா்? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்தனா். அதன்பின்பு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனா்.
அவா்கள் சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து வந்தனா். அவா்களும் வங்க தேச பயணியிடம் விசாரணை நடத்திவிட்டு, பின்பு மேல் நடவடிக்கைக்காக சென்னையில் உள்ள அவா்களுடைய அலுவலகத்திற்கு, வங்கதேச பயணியை கொண்டு சென்றனா்.
இதையும் படிங்க: துபாயிலிருந்து சென்னை வந்த 2 விமானங்களில் ரூ.93.5 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்