ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடை வீதி பகுதியைச் சேர்ந்தவர் பத்ரி. இவர் அங்கு கன்னிகா ஜுவல்லரி என்ற நகைக் கடை நடத்திவருகிறார். நேற்று முன்தினம் (பிப்ரவரி 1) இரவு பத்ரி வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 2) அதிகாலை நகைக் கடையின் அருகே வசித்துவரும் சீனிவாசன் என்பவருக்குச் சுவரை உடைப்பதுபோல ஏதோ சத்தம் கேட்டதால் எழுந்துவந்து பார்த்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நகைக்கடையின் பக்கவாட்டுச் சுவரில் துளையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே சத்தம் போட்டுள்ளார். இதனைக் கண்ட அந்த நபர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடினார்.
இதையடுத்து நகைக்கடை உரிமையாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கடை உரிமையாளர் பத்ரி, உடனடியாக சத்தியமங்கலம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் நகைக் கடையின் பக்கவாட்டுச் சுவரில் பாதி அளவு துளையிட்டு கொள்ளை முயற்சி செய்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ஈரோட்டிலிருந்து மோப்பநாய், தடயவியல் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சாலை ஆய்வாளர் நடவடிக்கை: வாழ்வாதாரத்தை இழந்த பெண் தொழிலாளி