திருவண்ணாமலை நாவக்கரையைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (55) என்பவர் அரசு கலைக் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இவர், கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் கிருஷ்ணவேணியை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர், ஜெய் என்கிற கதிரவன்(47), ஜீவானந்தம்(49) என்ற திருநங்கை, சிறுவர்கள் இருவரை கைது செய்தனர். இதையடுத்து, சிறார்கள் இருவரும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு கதிரவன், ஜீவானந்தம் ஆகிய இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், சிறப்பு நீதிபதி காயத்ரி முன்பு நேற்று (ஜனவரி 19) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்ட கதிரவன், ஜீவானந்தம் ஆகியோருக்கு ஆறு பிரிவுகளின் கீழ் தலா 55 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 23 ஆயிரம் அபராதமும், விதித்து தீர்ப்பளித்தார்.