சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடி கன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன்(28). இவர் அதே பகுதியில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். கடந்த ஜூன் 27ஆம் தேதி பூபாலன் 20 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னை ராயப்பேட்டை எஸ்பிஐ வங்கி அருகே சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 6 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து கத்தியால் அவரை வெட்டி பணத்தை பறித்து சென்றனர்.
ரூ. 20 லட்சம் கொள்ளை: இதுதொடர்பாக, பூபாலன் அளித்த புகாரின் பேரில் அண்ணா சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பணப்பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேலும், பணபறிப்பில் ஈடுபட வந்தவர்களின் இருசக்கர வாகனப் பதிவு எண்களை சிசிடிவி காட்சிகள் மூலமாக போலீசார் ஆய்வு செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பூபாலன் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய தங்கம் உள்ளிட்ட பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யக்கூடிய குருவியாக செயல்பட்டு வந்ததும், அதே போல விற்பனை செய்த பணத்தை பூபாலன் கொண்டு செல்லும்போதுதான் 6 பேர் கொண்ட கும்பல் பண பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
5 பேர் கொண்ட தனி கும்பல்: இதனையடுத்து, சிசிடிவி மற்றும் செல்போன் டவர் லொக்கேஷனை வைத்து, பூந்தமல்லி கரையான் சாவடியில் பதுங்கியிருந்த ராஜேஷ்(31) என்பவரை அண்ணாசாலை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் விருகம்பாக்கத்தை சேர்ந்த பாக்கியராஜ்(43) மற்றும் கே.கே. நகரை சேர்ந்த ஷேக் இஸ்மாயில்(54) ஆகியோரை பாரிமுனையில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராஜேஷிடம் நடத்திய விசாரணையில் அவர் கார்பெண்டராக பணியாற்றி வருவது தெரியவந்தது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ராஜேஷின் காலில் விபத்து ஏற்பட்டதால் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும், அதற்கு பணமில்லாமல் தவித்தபோது, 5 நபர்கள் தன்னை அணுகி வழிப்பறியில் ஈடுபட்டால் பணம் தருவதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
குருவியை காட்டிக்கொடுத்தவர்கள் கைது: மேலும், பணத்துடன் செல்லும் குருவிகளை காண்பித்தால் பணம் தருவதாக கூறியதால், ஷேக் இஸ்மாயில், பாக்கியராஜ் ஆகியோர் பூபாலனை காண்பித்ததாக விசாரணையில் தெரிவித்தனர். பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டால் புகார் அளிக்கப்பட்டு போலீசாரிடம் சிக்கிகொள்வோம் என்பதால் குருவிகளை குறி வைத்ததாகவும், வழிப்பறி செய்த பணத்தில் 1 லட்சம் கொடுத்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவர்களிடமிருந்து 1 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் மீதமுள்ள 5 நபர்களை தேடி வருகின்றனர். இதேபோன்று, நேற்று முன்தினம் (ஜூலை 24) திருவல்லிக்கேணி லாட்ஜ் உரிமையாளர் சாகுல் ஹமீத் என்பவரை கத்தியால் குத்தி ஒரு லட்ச ரூபாய், 69 கிராம் தங்கக் கட்டி, செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு ஒரு கும்பல் தப்பியோடியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் சினிமா பாணியில் கொள்ளை சம்பவம்