சென்னை: துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு ஃபிளை துபாய் சிறப்பு விமானம் வந்தது.
அதில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு (Passport), ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது, பெரம்பலூா் மாவட்டத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் (31) என்பவர் துபாய்க்கு வேலைக்கான விசாவில் கடந்த ஓராண்டிற்கு முன்பு சென்றிருந்தார்.
ஆனால் அவர் சட்டவிரோதமாக துபாயிலிருந்து, இந்திய அரசால் தடைசெய்யப்பட்டுள்ள ஏமன் நாட்டிற்குச் சென்று சுமார் ஆறு மாதங்கள் தங்கியிருந்துவிட்டு, தற்போது துபாய் வழியாக இந்த விமானத்தில் சென்னை வந்துள்ளது தெரியவந்தது.
ஏமன் நாட்டில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பதாகவும், அத்தோடு பிற நாடுகளைச் சேர்ந்த இளைஞா்களுக்கு அங்கு பயங்கரவாத பயிற்சியளிக்கப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மத்திய அரசு 2015ஆம் ஆண்டிலிருந்து இந்தியர்கள் யாரும் ஏமன் நாட்டிற்குச் செல்லக் கூடாது என்று தடைவிதித்துள்ளது. அத்தோடு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் துபாய், சார்ஜா போன்ற நாடுகள் வழியாக ஏமன் நாட்டிற்குச் செல்லவிருக்கும் பயணிகளை விமானத்தில் ஏற்றிச் செல்லவும் கூடாது என்று தடைவிதித்துள்ளது.
இந்தத் தடையை மீறி நிஜாமுதீன் ஏமன் நாட்டிற்குச் சென்று ஆறு மாதங்கள் தங்கியிருந்து, தற்போது சென்னை திரும்பியுள்ளது குடியுரிமை அலுவலர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையடுத்து நிஜாமுதீனை வெளியே விடாமல் தனி அறையில் வைத்து இரவு முழுவதும் தீவிர விசாரணை நடத்தினர். அத்தோடு மத்திய உளவுப்பிரிவு, பயங்கரவாதிகளை கண்காணிக்கும் கியூ பிரிவு காவல் துறையினர் ஆகியோரும் வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
நிஜாமுதீன் தான் வேலைக்காக துபாய் சென்றதாகவும், ஆனால் துபாயில் சரியான வேலை கிடைக்காததால், வேலை தேடி ஏமன் சென்றதாகவும் கூறினார். ஆனால் அலுவலர்களுக்கு அவர் பதில் நம்பிக்கை அளிக்கவில்லை. இவர் ஏமனில் பயங்கரவாதப் பயிற்சி மேற்கொள்ள சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
மேலும் நிஜாமுதீனின் சொந்த மாவட்டமான பெரம்பலூர் காவல் துறையினர் தகவல் தெரிவித்து இவருடைய பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.