வேலூர்: வேலூர் மாவட்டம் ராமலிங்கம் நகர் பகுதியில் 2005ஆம் ஆண்டு முதல் இயங்கிவந்தது டி.எஸ்.இ.இ.டி, (TSEED) என்ற தொண்டு நிறுவனம். மகளிர் சுய உதவிக் குழுவினருக்குத் தொழில் பயிற்சி அளிப்பது, கடன் பெற்றுக் கொடுப்பது போன்ற பணிகளை இவர்கள் செய்துவந்தனர்.
2018ஆம் ஆண்டு முதல் சுமார் 126 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு, இத்தொண்டு நிறுவனம் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (NABARD) துணை நிறுவனமான நாப்ஃபின்ஸ் (NABFINS) என்ற நிறுவனத்திடமிருந்து கடன் பெற்றுத் தந்துள்ளனர்.
உத்தரவை மீறியும் வசூல்
கரோனா ஊரடங்கு காரணமாக ஊரடங்கு காலத்தில் கடனுக்கான மாதத் தவணையைச் செலுத்தத் தேவையில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவிட்டிருந்த நிலையில், உத்தரவையும் மீறி டி.எஸ்.இ.இ.டி. (TSEED) தொண்டு நிறுவனம் மகளிர் சுய உதவிக் குழுவினரிடமிருந்து மாதாந்திர தவணைத் தொகையைப் பெற்று வந்துள்ளது.
இந்நிலையில், நாப்ஃபின்ஸ் (NABFINS) நிறுவனம் கரோனா ஊரடங்கிற்குப் பிறகு தொண்டு நிறுவனத்திடம் கடன் தொகையைத் தருமாறு கேட்டுள்ளது. ஆனால், பல மாதங்களாகியும் இவர்கள் பணத்தைத் தராததால் சந்தேகமடைந்த நாப்ஃபின்ஸ் (NABFINS) நிறுவனத்தினர் தொண்டு நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வுமேற்கொண்டனர்.
மூவர் கைது
அப்போது மகளிர் சுய உதவிக் குழுவினரிடமிருந்து பெற்ற கடன் தொகையான 34 லட்சத்து 73 ஆயிரத்து 287 ரூபாயை இவர்கள் வைத்துக்கொண்டு கையாடல் செய்ய முயற்சித்தது தெரியவந்தது.
இதனடிப்படையில் நாப்ஃபின்ஸ் (NABFINS) நிறுவனத்தின் மண்டல மேலாளர் லோகநாதன், வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமாருடைய உத்தரவின்பேரில், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், குற்றம் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் (நவம்பர் 27) வழக்குப்பதிவு செய்து தொண்டு நிறுவனத்தின் மேனேஜிங் டிரஸ்டியான திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (61), அதே பகுதியைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் நிதி நிர்வாகியான செல்வி (47), அந்நிறுவனத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்த தாட்சாயினி (39) ஆகிய மூவரையும் கைதுசெய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள ராஜம்மாள், வினோதினி ஆகிய இருவரையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: அமேசான் மூலம் ஆன்லைனில் கஞ்சா விற்பனை - CAIT கடும் கண்டனம்