சென்னை திருவல்லிக்கேணி வி.எம். தெருவில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இளைஞர்கள் சிலர் தங்கியுள்ளனர். அங்கு சந்தேகத்திற்கிடமாக பலர் விடுதிக்கு வந்து செல்வதாக மயிலாப்பூர் துணை ஆணையரின் தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது நாஜிம்(23) என்பவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்தனர். அங்கு ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முகமது யாசின்(30), என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து லாட்ஜில் வரக்கூடிய இளைஞர்களுக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார். இதேபோல் சையது அமீது(23) கஞ்சாவை வாங்க வரும்போது தான் காவல்துறையினரிடம் சிக்கியதாக தெரிவித்தார்.
இதையடுத்து, அவர் அளித்த தகவலின் பேரில் திருவல்லிக்கேணி பகுதியில் பதுங்கியிருந்த முகமது யாசின் என்பவரின் வீட்டை சோதனை செய்தபோது சுமார் ஒன்பது கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சா விற்பனை செய்து வந்த மூவரையும் கைது செய்தனர். இதில் முகமது யாசிம் மெடிக்கல் சர்ஜரி ஹெல்பராக பணிபுரிந்து வருவதும், சையது ஹமீது(24) பர்மா பஜாரில் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து நான்கு லட்சம் மதிப்புடைய 10 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.