வேலூர், திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் உள்ள அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரிகளின் வேலூர் மண்டல தொழில் நுட்பக் கல்வி செயற்பொறியாளராகப் பணியாற்றிய ஷோபனா (57) என்பவரை கைது செய்து, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆறு மாவட்டங்களில் உள்ள அரசுக் கல்லூரிகளின் கட்டடம் கட்ட ஒப்பந்தம் விடுதல், அதற்கான நிதியை ஒதுக்குதல் போன்றவை இவரது பணிகளாகும்.
இவர் லஞ்சம் பெறுவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினருக்குக் கிடைத்த ரகசியத்தகவலின் பேரில், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் நவ.02 ஆம் தேதி, இரவு ஒன்பது முப்பது மணி அளவில் பின் தொடர்ந்து, இவரை கையும் களவுமாக லஞ்சம் வாங்கும் போது கைது செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த நவ.3ஆம் தேதி வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஷோபனா, தங்கி இருந்த வீடு மற்றும் அவரது காரில் சோதனை செய்ததில் உரிய ஆவணம் இல்லாத 21 லட்சம் ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில், ஓசூரில் உள்ள அவரது வீட்டில் திடீர் சோதனையின் போது சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இல்லாத 2 கோடியே 27 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சில முக்கிய ஆவணங்களை வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று நவ.30 ஆம் தேதி, ஷோபனாவைக் கைது செய்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் ரூ.10 கோடி போதைப் பொருள்கள் எரிப்பு