வேலூர்: அரசுப் பள்ளியொன்றில் மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் விழாவில், அமைச்சர் துரைமுருகன் உரையாற்றியபோது, மின்சார விநியோகம் தடைபட்ட விவகாரத்தில் இரு மின் வாரிய உதவி பொறியாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
காட்பாடியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (செப்.12) மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்புகொண்டும் மின் இணைப்பு வராததால் அதிருப்தி அடைந்த அமைச்சர் துரைமுருகன் விழாவை விரைந்து முடித்துக்கொண்டு புறப்பட்டுச்சென்றார்.
இதனையடுத்து இது தொடர்பாக, விசாரணை மேற்கொள்ளப்பட்டு காட்பாடி, தாராப்படவேடு ஆகிய பகுதி துணை மின் நிலைய உதவி பொறியாளர்கள் கிரண்குமார், சிட்டிபாபு ஆகிய இருவரை காட்பாடி வடுங்கன்தாங்கல் துணை மின் நிலையத்துக்குப் பணியிட மாற்றம் செய்து வேலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: உணர்ச்சிபொங்க பேசிக்கொண்டிருந்தபோது திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம் - அமைச்சர் துரைமுருகனுக்கே இந்த கதி!