மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு டிடிவி தினகரனின், அமமுக கட்சியிலிருந்து, பல்வேறு முக்கிய நிர்வாகிகள் விலகி மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக டிடிவி தினகரனின் வலதுகரமாக இருந்துவந்த தங்க தமிழ்செல்வன், சமீபத்தில் அமமுகவிலிருந்து விலகி அதிரடியாக திமுக இணைந்து கொண்டார். தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு நிர்வாகிகள் அமமுகவிலிருந்து விலக உள்ளதாகப் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த சூழ்நிலையில் வேலூர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், அமமுகவின் மாநில அமைப்புச் செயலாளருமான ஞானசேகரன், திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஞானசேகரன், ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் தமாக ஆகிய கட்சிகளிலிருந்துள்ளார்.
வேலூர் தொகுதியில் நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். இதனால் இவர் மக்களுக்கு நன்கு அறியப்பட்டவர் ஆவார். இவர் கடந்தாண்டு டிடிவி தினகரனைச் சந்தித்து அமமுகவில் இணைந்தார். அங்கு அவருக்கு மாநில அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் முடிவுக்குப் பிறகு அமமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளதால், ஞானசேகரன் அதிருப்தியிலிருந்து வந்துள்ளார்.
இதனால் தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைய உள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில், எனக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைய உள்ளேன்” என்றார். எதற்காக அமமுகவிலிருந்து விலகினீர்கள் என்ற கேள்விக்கு ஞானசேகரன் சரிவர பதில் அளிக்கவில்லை.