திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகனை தலைவராகக் கொண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இன்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர் துரைமுருகன் தலைமையிலான குழுவினர் வேலூரில் நடைபெற்றுவரும் அரசுத் திட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.
அதில் காட்பாடி, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுவரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணிகளை இந்தக் குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து சத்துவாச்சாரி பகுதியில் நடைபெற்றுவரும் பாதாளச் சாக்கடைத் திட்ட பணிகளை துரைமுருகன் தலைமையில் குழுவினர் ஆய்வு செய்து அலுவலர்களிடம் விவரம் கேட்டறிந்தனர்.
ஆய்வுக்குப் பிறகு துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்று பல்வேறு திட்டங்கள் குறித்து கணக்கு தணிக்கைத் துறை அளித்த அறிக்கையின்படி துறைவாரியாக குறித்த விளக்கங்களை அலுவலர்களிடம் கேட்டோம். சில விளக்கங்கள் திருப்திகரமாக இருந்தது.
வேலூரில் சீர்மிகு நகர் பணிகள் பற்றி நாடாளுமன்ற-சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோரை வைத்து விரிவாக ஆலோசனை செய்து ஒரு மாதத்திற்குள் மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க வேண்டும் எனக் குழு அறிவுறுத்தியுள்ளது.
காட்பாடி ரயில்வே மேம்பாலம் விரிவாக்கப் பணிகள் தொடர்பாக நாளை ரயில்வே அலுவலர்கள் பார்வையிடுகிறார்கள். வேலூரில் நிலவிவரும் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காணும்படியும் மாவட்ட ஆட்சியரை கேட்டுக் கொண்டுள்ளோம்" என்றார்.
ஆய்வில் கார்த்திகேயன், டி.ஆர்.பி. ராஜா, நட்ராஜ் ஆகிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரமும் பங்கேற்றார்.