ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குள்பட்ட மண்டலவாடி கிராமத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்ட விழாவில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் பேசியதாவது:
விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு நல்லொழுக்கம் ஏற்படுவதோடு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு விளையாடக்கூடிய ஒரு இடமாக விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.
கிராமப்புறங்களில் விளையாட்டு மைதானம் இல்லை என்பதற்காகவே தமிழ்நாடு அரசு ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் ஒரு விளையாட்டு மைதானத்தை ஏற்படுத்தி அங்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கிவருகிறது.
இதனை மாணவர்களும் விளையாட்டு இளைஞர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இந்த விளையாட்டு மைதானங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை தமிழ்நாட்டில் 13 ஆயிரத்து 52 கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் சிறப்பாக செயல்படுத்திட மாவட்ட அளவிலான விளையாட்டு ஆலோசனைக்குழு, ஊராட்சி பேரூராட்சி விளையாட்டு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விளையாட்டு மையங்களில் கபடி, வாலிபால், கிரிக்கெட் அல்லது பூப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதனை அந்தந்தப் பகுதியில் உள்ள கல்லூரி, பள்ளிகளில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பார்கள் எனது விளையாட்டில் சிறந்து விளங்க மாணவர்களும் இளைஞர்களும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அமைச்சர் நிலோபர் கபீல் பேசினார்.
இவ்விழாவில் பேசிய அமைச்சர் கே.சி. வீரமணி, “தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது. உலகளவில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு இரண்டு கோடி ரூபாய் பரிசு வழங்குகிறது.
இதுபோன்று எந்த ஒரு மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை எனவே மாணவர்களும் இளைஞர்களும் விளையாடிய தங்களை ஈடுபடுத்திக்கொண்டு விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும்” என அமைச்சர் பேசினார்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வாணியம்பாடி நகராட்சி கட்டடத்தில் நிலோபர் கபீல் ஆய்வு