வேலூர்: தமிழ்நாடு முழுக்க 106 இடங்களில் இலங்கை அகதிகளுக்கான குடியிருப்பு அமைத்து கொடுக்கும் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் வருகிறார்.
இதனையடுத்து முதலமைச்சரின் வருகையையொட்டி நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு நேற்று (அக்.28) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் கைத்தறித்துறை மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் முகாமிற்கு சென்று ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள், முகாமில் அகதிகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா.? அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா.? குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா.? என்பதை இலங்கை அம்மக்களிடம் கேட்டறிந்தனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மஸ்தான், ”வருகின்ற 3ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் வேலூருக்கு வருகை தந்து மேல் மொணவூர் அகதிகள் முகாமில் உள்ள அகதிகளை சந்தித்து அவர்களின் குறைகள் கேட்டறியயுள்ளார்.
அதன்பின் தமிழ்நாட்டில் 106-இடங்களில் இலங்கை அகதிகள் குடியிருப்புகள் அமைப்பதற்கான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதனைதொடர்ந்து 110 விதியின் கீழ் 317 கோடியில் 20 ஆயிரம் குடியிருப்பு கட்டித்தர உள்ளோம். மேலும், முகாமில் இருப்பவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்விக்காக இந்த முறை இலங்கை முகாமில் உள்ளவர்களுக்கு 4% கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளோம். மேலும், இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க:ஆர்பிஐ கவர்னர் சக்தி கந்த தாஸ் பதவிக்காலம் நீட்டிப்பு!