வேலூர்: மோட்டூர் பகுதியில் சட்டவிரோதமாக ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு புகார் வந்தது.
அவரது உத்தரவின்பேரில் வேலூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் காமராஜ், பறக்கும் படை வட்டாட்சியர் கோட்டீஸ்வரன், உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் மோட்டூர் பிரசாத் நகர் பகுதியில் இன்று (ஜூன் 30) சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஷேர் ஆட்டோ, மற்றும் மினி வேனில் வந்த இருவர் அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டில் ரேஷன் அரிசிகளை இறக்கிக்கொண்டிருந்தனர். அவர்களை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
இதுதொடர்பாக வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த இம்ரான் (26), கஸ்பாவைச் சேர்ந்த ராமசந்திரன்(37) ஆகியோரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல்செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த 3 டன் அரிசியையும் பறிமுதல் செய்து வேலூர் தொரப்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர். இது குறித்து உணவு பொருள் பாதுகாப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.