வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை தங்கவேல் தெருவைச் சேர்ந்தவர் குயில்தாசன்- அற்புதம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் பேரறிவாளன். இவர் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது தந்தை உடல்நலத்தைப் பாதுகாக்கவும்; அவரது சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் அவரது தாய் அற்புதம்மாள் பரோல் வழங்க தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.
அதனடிப்படையில் பேரறிவாளனுக்கு நீதிமன்றம் 12.11.2019 அன்று ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் ஒரு மாதம் பரோல் முடிவடையும் நிலையில் இருந்தபோது, பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு ஆஸ்துமா மற்றும் உடல் தொற்று நோய்ப் பாதிப்பால் உடல்நிலை மோசமானதை அடுத்து மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது.
இரண்டு மாத பரோல் காலம் முடிவடைந்ததையடுத்து பேரறிவாளன் இன்று சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாக, பேரறிவாளன் வேலூர் ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளர் விநாயகம் தலைமையில் ஒரு காவல் தலைமை ஆய்வாளர் மற்றும் ஆறு காவலர்களின் பலத்த பாதுகாப்போடு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இரண்டு மாத பரோலில் வெளிவந்த பேரறிவாளனை இதுவரையில் அவரது நெருங்கிய உறவினர்கள் 300க்கும் மேற்பட்டோர் வந்து சந்தித்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
பேரறிவாளன் ஏற்கெனவே கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை தொடர்ந்து இரு மாதம் பரோலில் வந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற பேரறிவாளன் !