முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் தனது தந்தையை உடன் இருந்து கவனித்துக் கொள்வதற்காக கடந்த 12ஆம் தேதி ஒரு மாத பரோலில் வந்தார். அவர் ஜோலார்பேட்டையில் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் பேரறிவாளனின் சகோதரி அன்புமணியின் மகள் செவ்வை - கவுதமன் திருமணம் கிருஷ்ணகிரியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று (நவ.24) நடந்தது. இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள பேரறிவாளன் கிருஷ்ணகிரி வந்தார்.
அவரை 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் திருமண மண்டபத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு மணமக்களை பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் வாழ்த்தினார்கள். பின்னர் இசைக்கலைஞர்களுடன் இணைந்து பேரறிவாளன் பறை (தப்பாட்டம்) ஒலித்தார். அதை பார்த்துக் கொண்டிருந்த அற்புதம்மாள் மகிழ்ச்சி பொங்க தானும் ஓடோடி வந்து அந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நடந்தது. அந்த வரவேற்பில் பேரறிவாளனுடன் அமைச்சர் கே.சி. வீரமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், இயக்குநர் அமீர், கவுதமன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது: இயக்குநர் கௌதமன் பேட்டி