வேலூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை செய்துவந்தார். சிறுமிக்கும் அந்தக் கடையில் வேலை பார்த்துவந்த அப்பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது சிறுவன் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சிறுமியிடம் நெருங்கிப் பழகியதாகவும், அதனால் சிறுமி கர்ப்பமானதாகவும், கர்ப்பத்தைக் கலைக்க சிறுவன் மாத்திரை வாங்கிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (பிப். 28) அந்த மாத்திரையைச் சாப்பிட்ட சிறுமி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்தபோது சிறுமியின் கர்ப்பம் கலைந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து மருத்துவர், சிறுமியிடமும் அவரின் பெற்றோரிடமும் விசாரித்ததில், சிறுமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மருத்துவர் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குச் சென்று சிறுமி, அவரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் சிறுமியை கர்ப்பமாக்கி, அதனைக் கலைக்க மாத்திரை வாங்கிக் கொடுத்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: வாக்குப்பதிவில் ஆள்மாறாட்ட புகார் வந்தால் மறுதேர்தல்!