வேலூர் மாவட்டத்தைச் சேர்த்த 17 வயது சிறுவனும், 14 வயது சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த அரும்புகளின் காதலை சிறுமியின் பெற்றோர் ஏற்க மறுத்துள்ளனர். இதனால், கடந்த 23ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அந்த காதல் ஜோடிகளைத் தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே அவர்கள் இருவரையும் தேடிக் கண்டுபிடித்த சிறுமியின் வீட்டார், கடந்த 24ஆம் தேதி அவர்களது வீட்டில் வைத்து சிறுவனை சரமாரியாக தாக்கினர்.
இதில், பலத்த காயமடைந்த சிறுவனை, மாடியில் இருந்து கீழே விழுந்தால் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு, சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் சிறுவன் வீட்டாருக்குத் தெரியவரவே சிறுமியின் தந்தை மீது காவல் நிலையத்தில் நேற்று (அக் 26) புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியின் தந்தையை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
சிறுமியின் வீட்டார் மீது காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
இந்நிலையில், வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறுவனின் தந்தை புகார் அளித்துள்ளார். அதில், “எனது மகன் காதலித்த வந்த சிறுமி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
பின்னர், இருவரும் வீட்டை விட்டுச் சென்ற காரணத்தால் எனது மகனை கடுமையாக தாக்கியுள்ளனர். ஆனால், பாகாயம் காவல் துறையினர், எனது மகன் தெருவில் சென்றுகொண்டிருந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எனவே இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காதலனுக்கு நிச்சயதார்த்தம் - டெட்டால் குடித்த காதலி