வேலூர்: கடந்த நவம்பர் 29ஆம் தேதி அதிகாலை 4.17 மணிக்கு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவானது, இந்த நில அதிர்வு வேலூருக்கு தெற்கு - தென்மேற்கில் 59.4 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது 25 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, வேலூரிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் நேற்று முன்தினம் (டிசம்பர் 23) திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதை நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், வேலூரிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் பிற்பகல் 3.14 மணிக்கு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவாகி உள்ளது என்று கூறியிருந்தது.
மேலும், இந்த நில அதிர்வானது 10 கிமீ ஆழத்தில் வேலூருக்கு மேற்கு - வடமேற்குத் திசையில் 50 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவித்திருந்தது.
மீண்டும் ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் பீதி
இந்நிலையில், இன்று (டிசம்பர் 25) காலை மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதாக வேலூர், குடியாத்தத்தை அடுத்த பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகையில், நாங்கள் அனைவரும் ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு முறை சுமார் மூன்று விநாடிகள் நீடித்த நில அதிர்வினை உணர்ந்தோம். இந்த நில அதிர்வை உணர்ந்த பலரும் அச்சத்தில் வீட்டைவிட்டு வெளியே வந்தனர் என்று தெரிவித்தனர்.
இவ்வாறு நில அதிர்வு ஏற்பட்டும் தற்போதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அரசிடமிருந்து வெளியிடப்படவில்லை. மேலும், வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்ற நில அதிர்வுகள் உணரப்பட்டுவருவதால் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: train extended: ராமேஸ்வரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு